தூத்துக்குடி: தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் நகையே இல்லாமல் நகைக்கடன்கள் வழங்கப்பட்டதும், வைப்புத்தொகைக்கு போலியான பாண்ட் வழங்கி ரூ.3 கோடிக்கு மோசடி நடந்திருப்பதும் அலுவலர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தலைவர் பதவி நீக்கமும் பிற நிர்வாகிகள் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகளில் ஐந்து சவரன் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் ஏற்கனவே அறிவித்திருந்தார். யாருக்கெல்லாம் இந்தச் சலுகை கிடைக்கும் என்பது குறித்த அறிவிப்பு வெளியானதும் அலுவலர்கள் குழுவினர் அனைத்துக் கூட்டுறவு வங்கிகளிலும் அடைமானமாக வைக்கப்பட்ட நகைகளின் விவரம் அறிய வங்கிகளில் ஆய்வு செய்துவருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகிலுள்ள குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் தலைவராக நாலுமாவடியைச் சேர்ந்த முருகேச பாண்டியன், செயலாளராக திருச்செந்தூரைச் சேர்ந்த தேவராஜ், துணைச் செயலாளராக குரும்பூரைச் சேர்ந்த ஜான்ஸி சந்திரகாந்தா ஞானபாய் ஆகியோர் உள்ளனர். இந்த நிலையில் ஆழ்வார்திருநகரி வட்டார கூட்டுறவு வங்கியின் கள அலுவலரும், கூட்டுறவு சார்பதிவாளரான ஆழ்வார்குமாரிடம் குரும்பூர் வங்கியின் நகை அடைமான கடன் குறித்தும் மத்திய கூட்டுறவு வங்கி மேற்பார்வையாளர்கள் கேட்டறிந்தனர்.
இதேபோல் வங்கியில் வைப்புத்தொகை செலுத்திய பணம் இருக்கிறதா என்று வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவராக வந்து பார்த்தபோது, வைப்புத்தொகைப் பணத்தை வாடிக்கையாளர்கள் கணக்கில் வரவு வைக்காமல் அவர்களுக்கு போலியான பாண்ட் போட்டுக் கொடுத்து அந்தப் பணத்தையும் மோசடி செய்தது தெரியவந்தது. தொடர்ச்சியாக வங்கியில் லட்சணக்கில் பணத்தை வைப்புத்தொகையாகச் செலுத்த வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவராக விசாரணைக் குழுவினரிடம் புகார் அளித்துவருகின்றனர்.
இதனால், இந்தப் பண மோசடி மூன்று கோடிக்கும் மேல் செல்லலாம் என்கின்றனர். இதனையடுத்து வங்கித் தலைவர் முருகேசப்பாண்டியன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். செயலாளர் தேவராஜ், துணைச் செயலாளர் ஜான்ஸி சந்திரகாந்தா ஞானபாய், ஆழ்வார்திருநகரி வட்டார கூட்டுறவு வங்கி கள அலுவலர் ஆழ்வார்குமார் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பண மோசடி குறித்து விசாரணை அலுவலர்களிடம் கேட்டபோது, “குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் ஆய்வு இன்னும் நிறைவடையவில்லை. நகை வைக்காமலேயே நகைக்கடன் பெற்றதுபோல், போலி நகை வைத்து நகைக்கடன் பெற்றுள்ளார்களா என்பது குறித்தும் ஆய்வுசெய்து வருகிறோம்.
மேலும் வைப்புத்தொகைச் செலுத்த பாண்ட் வைத்துள்ளவர்கள், அவர்களது கணக்கைச் சரிபார்த்தபோது, அந்த வைப்புத்தொகை செலுத்திய கணக்கு எண் இல்லை என்பதும், வாடிக்கையாளர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு போலியான பாண்டை கொடுத்தது இப்போதுதான் தெரியவருகிறது.
இதுபோன்று இன்னும் பலர் வங்கியில் கொடுத்த போலியான பாண்டை கொண்டு வந்து தொடர்ந்து எங்களிடம் புகார் மனு அளித்துவருகின்றனர். எவ்வளவு பணம் மோசடி நடந்துள்ளது என்று இனி நடக்கும் விசாரணையில்தான் தெரியவரும். செயலாளர் தேவராஜ் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தலைமறைவாகிவிட்டார்.
மோசடியில் ஈடுபட்டவர்கள் தங்களது சொத்துகளை மற்றவர்கள் பெயரில் மாற்றாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. விசாரணை முடிந்தவுடன் மோசடியில் ஈடுபட்டவர்களின் சொத்துகள் முடக்கப்படும்” என்றனர்.
இதையும் படிங்க:பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றவாளிகளிடம் குற்றப்பத்திரிகை நகல்