தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா வருகின்ற 25ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் 30 ஆம் தேதி நடைபெறுகிறது.
பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதற்காகக் கோயில் நிர்வாகம் தரப்பில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (அக். 21) ஆய்வு செய்தார். ஆய்வின் போது அவருடன் ஆணையர் குமரகுருபரன், மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் உட்பட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது, "கோயில் வெளி பிரகாரத்தில் பக்தர்கள் தங்கி விரதம் இருக்க தற்போது 13 இடங்களில் கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக 5 இடங்கள் தேர்வு செய்து 18 இடங்களில் கொட்டகைகள் அமைக்கப்படும். கந்த சஷ்டி திருவிழாவில் தினம்தோறும் 400 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். கடற்கரை பகுதிகளில் 3 ட்ரோன் கேமராகள் மூலம் பக்தர்கள் கண்காணிக்கப்படுவார்கள்.
66 இடங்களில் குடிநீர் வசதி, 320 இடங்களில் கழிப்பிட வசதி அமைக்கப்படும். 19 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு மருத்துவ வசதி ஏற்படுத்தப்பட்டும். 6 இடங்களில் பெரிய அகன்ற திரைகள் மூலம் கந்த சஷ்டி அனைத்து நிகழ்வுகளும் திரையிடப்படும். பராமரிப்பு பணிகள் காரணமாகக் கடந்த நான்கு மாதங்களாகத் தங்கத் தேர் பவனி நிறுத்தப்பட்டுள்ளது.