சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் சிகால் ஏற்றுமதி - இறக்குமதி நிறுவன கிளை தூத்துக்குடி-மதுரை புறவழிச்சாலை சிப்காட் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில், 50 ஆயிரம் சதுரடி பரப்பும், 200 மீட்டர் நீளத்தில் 8 வாசல்கள் கொண்ட பெரிய ஏற்றுமதி பொருள்கள் தேக்கும் குடோன் தனியே உள்ளது.
இதில் இன்று (ஏப்.9) பகல் 2 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் குடோனில் ஒரு பகுதியில் பற்றி எரிந்த தீ மற்ற 7 வாசல் பகுதிகளுக்கும் மளமளவென பரவியது.
இதையடுத்து, இந்த தீ விபத்து குறித்து தூத்துக்குடி சிப்காட் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார், “சிகால் நிறுவன ஏற்றுமதி குடோனில் ஆயத்த ஆடைகள், பொம்மைகள், காகித பண்டல்கள், ரப்பர் சீட்டுகள் ஆகியவை தீயில் எரிந்துள்ளது. இந்த தீயை அணைக்கும் பணியில் அரசு, தனியார் நிறுவனங்களை சேர்ந்த 8 தீயணைப்பு வாகனங்கள், 3 தண்ணீர் நிரப்பும் லாரிகள் ஈடுபடுத்தப்பட்டன.