தூத்துகுடி: கரோனா அச்சுறுத்தலுக்குப் பின்னர் நாடு மெள்ள மெள்ள இயல்புநிலைக்குத் திரும்பிவரும் வேளையில் 2021-2022ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல்செய்தார். ஊரடங்கிற்குப்பின் தாக்கல்செய்யப்படும் நிதிநிலை அறிக்கை என்பதால் இந்த அறிவிப்புகள் அனைத்தும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.
இதில் குறிப்பிடும்படியாக தமிழ்நாட்டின் சாலைப் பணிகளுக்காக 1.3 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கி 3,500 கிலோமீட்டர் நீளத்திற்குச் சாலைகள் அமைக்கப்படும் என அறிவித்தார். சென்னை மெட்ரோ விரிவாக்கத்திற்கு 63 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கு வருமான வரிச்சலுகை, 75 வயதிற்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு வருமான வரி விலக்கு, மின் துறையில் தனியார் மின் உற்பத்தி நிலையங்களை அனுமதிப்பது, பொதுத்துறை நிறுவனங்களான எல்ஐசி காப்பீட்டுக் கழகம், இந்தியன் ஷிப்பிங் கார்ப்பரேஷன், ஐடிபிஐ வங்கி, பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்கும் அறிவிப்பையும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது நிதிநிலை அறிக்கையில் உரையில் அறிவித்திருந்தார்.
மத்திய அரசின் இந்த நிதிநிலை அறிக்கை அறிவிப்பு பொதுமக்கள் மத்தியிலும் பொதுத் துறை நிறுவனத்தினர் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட பொதுத் துறை நிறுவன ஊழியர்கள் ராஜா ஈடிவி பாரத்திடம் பேசியபோது, "மத்திய அரசின் இந்த நிதிநிலை அறிக்கை என்பது கண்ணை விற்று சித்திரம் வாங்கும் கதையாக உள்ளது. நாட்டின் பொருளாதார தூண்களாக விளங்கும் பொதுத் துறை நிறுவனப் பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முயற்சி என்பது ஆபத்தானது" எனத் ராஜா தெரிவித்திருந்தார்.
ஓய்வூதியர்கள் சங்க செயலாளர் ராமமூர்த்தி பேசுகையில், "நாட்டில் 75 வயதிற்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் என்பது மிக குறைவு. எனவே மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அளித்துள்ள வரிச்சலுகை என்பது எந்த விதத்திலும் பயனளிக்காது. ஓய்வுபெறும் வயதை எட்டிய அனைவருக்கும் ஓய்வூதியம் பெறும் நேரத்தில் வருமான வரி சலுகை அளித்தல் என்பதே பயன்தரும். இதையே நாங்கள் வலியுறுத்திவருகிறோம்.