தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் காவல் நிலைய மரணம் தொடர்பான வழக்கை, சிபிஐ விசாரித்து வருகிறது. முன்னதாக, சிபிசிஐடி போலீசாரிடம் இருந்து வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றுக்கொண்ட சிபிஐ அலுவலர்கள் சாத்தான்குளத்தில் விசாரணையைத் தொடங்கினர்.
ஜெயராஜின் உறவினர்கள், செல்போன் கடை, பக்கத்து கடைக்காரர்கள், சாட்சியங்கள், பொதுமக்கள், அரசு மருத்துவமனையில் பணியாற்றிய ஊழியர்கள், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர்கள், சிசிடிவி கேமரா காட்சிகள், பென்னிக்ஸின் நண்பர்கள் உள்பட பல தரப்பட்ட சாட்சிகளிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.
இதைதொடர்ந்து, இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவலர்களை காவலில் எடுத்து சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. விசாரணையின்போது, சாட்சிகளிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்கள், சிபிசிஐடி தரப்பில் வழங்கப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்டவற்றை மூலமாக கொண்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வந்தது.