தமிழ்நாடு

tamil nadu

சாத்தான்குளம் கொலை வழக்கு: ஐந்து பேரிடம் சிபிஐ விசாரணை

By

Published : Jul 15, 2020, 5:21 AM IST

தூத்துக்குடி: சாத்தான்குளம் கொலை வழக்கு தொடர்பாக காவலர் முத்துராஜிடம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து சிபிஐ அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.

sathan
sathan

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கினை சிபிஐ விசாரித்துவருகிறது. முன்னதாக இந்த வழக்கைவிசாரணை செய்த சிபிசிஐடி, சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், எஸ்.எஸ்.ஐ பால்துரை உள்பட 10 பேரைக் கைது செய்தது.

தொடர்ந்து, விசாரணையை கையில் எடுத்த மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜய்குமார் சுக்லா தலைமையிலான 7 பேர் கொண்ட சிபிஐ விசாரணைக் குழு, சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கினை 4 பிரிவுகளின் கீழ் கொலை வழக்காக பதிவு செய்தது.

அதனையடுத்து கடந்த மூன்று நாள்களாக தூத்துக்குடியில் சிபிஐ அலுவலர்கள் விசாரணை செய்துவந்தனர். இதற்கிடையில், தூத்துக்குடி மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் எஸ்.ஐ பாலகிருஷ்ணன் பிணை மனு தாக்கல் செய்தனர். அதனை அறிந்த சிபிஐ மதுரை மாவட்ட முதன்மை குற்றவியல் தலைமை நீதிமன்றத்தில், ஸ்ரீதர், ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ் மற்றும் முருகன் ஆகிய ஐந்து பேரை காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தது.

இந்நிலையில், தூத்துக்குடி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தனது பிணை மனுவை ஸ்ரீதர் வாபஸ் பெற்றார். இதற்கிடையில், சிபிஐ தரப்பில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நேற்று காலை விசாரணைக்கு வந்தது. மனுவை நீதிபதி ஹேமானந்தகுமார் விசாரித்தார்.

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஐந்து பேரையும் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்ய முடிவெடுத்திருப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிபிஐ விசாரணைக்கு செல்ல சம்மதமா என ஐந்து பேரிடமும் நீதிபதி கேட்டபோது முதலில் அவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

ஆனால், சிபிஐ தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐந்து பேரும் விசாரணைக்குச் செல்ல சம்மதம் தெரிவித்தனர். அதனையடுத்து மூன்று நாள்கள் சிபிஐ விசாரணைக்கு நீதிபதி அனுமதி அளித்தார்.

இதனையடுத்து, ஐந்து பேரையும், தூத்துக்குடி அழைத்துச் சென்று விசாரிக்க சிபிஐ அலுவலர்கள் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே சிபிஐ காவலில் எடுத்த 5 பேரையும், தூத்துக்குடிக்கு அழைத்து சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்ய திட்டமிட்டனர். இதில் காவலர் முத்துராஜை சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று ஜெயராஜ்-பென்னிக்ஸை அழைத்து வந்து விசாரித்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்தியது. இவை அனைத்தையும் சிபிஐ அலுவலர்கள் வீடியோவாக பதிவு செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details