சிறையில் தந்தை, மகன் இறந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். பல்வேறு கட்டங்களாக நடைபெற்றுவரும் இந்த விசாரணையில், காவல் ஆய்வாளர் உள்பட 5 பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சாத்தான்குளம் கொலை வழக்கு: பென்னிக்ஸின் நண்பர்களிடம் சிபிசிஐடி விசாரணை
தூத்துக்குடி: சாத்தான்குளம் கொலை வழக்கு தொடர்பாக பென்னிக்ஸின் நண்பர்களிடம் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், சாட்சியங்கள், குடும்ப உறுப்பினர்கள், பக்கத்து கடைக்காரர்கள், சிசிடிவி காட்சிகள், தடயங்கள் உள்ளிட்டவற்றின் மூலம் கிடைக்கும் ஆதாரங்களைக் கொண்டு சிபிசிஐடி காவலர்கள் விசாரணையைத் துரிதமாக நடத்திவருகின்றனர்.
சம்பவம் நடந்த அன்றிரவு பென்னிக்ஸ் தனது நண்பருடன் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்ற காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன. இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்கு பென்னிக்ஸ் நண்பர்களுக்கு சிபிசிஐடியினர் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்பேரில் பென்னிக்ஸின் நண்பர்கள் நான்கு பேர் இன்று (ஜூலை 5) தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகினர்.
அவர்களிடம் சிபிசிஐடி காவல் துணைக் கண்காணிப்பாளர் அனில் குமார் விசாரணை நடத்திவருகிறார். இதில் சம்பவத்தன்று ஜெயராஜ்-பென்னிக்ஸ் அடித்து துன்புறுத்தப்பட்டு தொடர்பான பல முக்கியத் தகவல்களை அவர்கள் சாட்சி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.