கோவில்பட்டி அருகே பள்ளியில் சாதியைக் கூறி மாணவர் மீது தாக்குதல்: 2 பெண்கள் மீது வழக்குப்பதிவு தூத்துக்குடி:சிதம்பரம்பட்டியைச் சேர்ந்த பேச்சிப்பாண்டி என்பவரது மனைவி மாரியம்மாள் (30). இவரது மகள் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மீது அதே பள்ளியில் படிக்கும் 7ஆம் வகுப்பு மாணவர் சஞ்சய் என்பவர் தடுக்கி விழுந்துள்ளார்.
இதனால் லட்சுமி, தனது உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த சங்கர லட்சுமணனின் மனைவி லட்சுமி (40) என்பவருடன் நேற்று முன்தினம் (டிச.14) மாலையில், அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்குள் புகுந்து 7ஆம் வகுப்பு பயிலும் 12 வயது மாணவரை செருப்பால் அடித்ததோடு சாதி பெயரை சொல்லி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவரின் தாயார் லட்சுமி என்பவர் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் இன்று (டிச.16) புகார் அளித்தார். அதன் பேரில் காவல் துறையினர் மாரியம்மாள், லட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று தாக்கப்பட்ட மாணவரின் தாய் லட்சுமி மற்றும் உறவினர்கள் கோவில்பட்டி டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு, டிஎஸ்பி வெங்கடேஷிடம் மாணவரை தாக்கியவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அவர் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து அவர்கள் கல்வி மாவட்ட அலுவலர் ஜெயபிரகாசத்திடம் வழங்கிய மனுவில், “நாங்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் எங்களது குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு பயின்று வரும் கண்ணன்-லட்சுமி தம்பதியின் மகனை, அதே பள்ளியில் படித்து வரும் வேறு சமூகத்தைச் சேர்ந்த சிறுமியின் தாயாரும் அவரது உறவினரும் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து, பள்ளியில் படித்துக் கொண்டிருந்த மாணவரை தாக்கியுள்ளனர்.
இதனை தலைமை ஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்கள் கண்டிக்காமல் இருந்துள்ளனர். இது தொடர்பாக, மாவட்ட கல்வி அலுவலருக்கும் புகார் தெரிவிக்கவில்லை. எனவே, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பள்ளி தலைமை ஆசிரியரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, வகுப்பறைக்குள் மாணவர் மீது தாக்குதல் நடத்தியபோது, ஆசிரியர்கள் தடுக்கவில்லை என்றும், வெளியே சென்று அடிக்க சொன்னதாகவும் பாதிக்கப்பட்ட மாணவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பள்ளிகளில் சாதியப் பாகுபாடு... அரசு நடவடிக்கை தேவை - பியூசிஎல் கோரிக்கை