தூத்துக்குடி:விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் ஊராட்சி ஒன்றியம் மேல அருணாலபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஜெகநாதபுரம் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சுடுகாட்டிற்கு தனியார் விவசாய நிலங்களின் வழியாக இறந்தவர்களின் உடல்களைக்கொண்டு சென்று அடக்கம் செய்து வந்தனர்.
தற்போது அப்பகுதியில் பயிரிட்டதால் நிலத்தின் வழியாக செல்வதற்கு, அந்நிலத்தின் உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் இறந்தவர்கள் உடலை வண்ணிப்பட்டி வழியாக சுடுகாட்டிற்கு கொண்டு அடக்கம் செய்வதாக தாசில்தார் தலைமையில் நடைபெற்ற சமாதானப்பேச்சு வார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று(ஆக.31) ஜெகநாதபுரம் பகுதியில் மறைந்துபோன பெரியசாமி (83) என்பவரின் உடலை இன்று(செப்.1) அடக்கம் செய்வதற்காக வண்ணிப்பட்டி ஊர் வழியாக உடலை எடுத்துச்செல்வதற்கு ஊர் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விளாத்திகுளம் வட்டாட்சியர் சசிகுமார், விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் வந்து உரியவர்களிடம் பேச்சுவார்த்தை நடைத்தினர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், அப்பகுதியில் ஓடை வழியாக இடுப்பளவு நீரில் இறங்கி, உடலை சுடுகாட்டிற்குக்கொண்டு சென்று அடக்கம் செய்தனர். இந்த அவல நிகழ்வு அப்பகுதி மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ஸ்ரீவைகுண்டம் அருகே இடையூறாக இருக்கும் கல் குவாரியை இழுத்து மூட வேண்டும் ... ஊர்மக்கள் மனு