தூத்துக்குடி: தூத்துக்குடி தெர்மல் நகரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் கட்டட ஒப்பந்ததாரராக இருக்கிறார். இவர் நேற்று(ஏப்.1) இரவு தூத்துக்குடி பால விநாயகர் கோயில் தெருவில் உள்ள ஒரு ஸ்டேஷனரி கடையில் பொருட்கள் வாங்குவதற்காக தனது பொலிரோ காரில் வந்துள்ளார்.
காரை ஆன் செய்த நிலையிலேயே விட்டுவிட்டு, கடைக்கு பொருள் வாங்கச் சென்றுள்ளார். இதை அப்பகுதியில் மது போதையில் நின்று நோட்டமிட்டுக் கொண்டிருந்த முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த தங்கதுரை மற்றும் சிலர் காரை திருடிச் சென்றுவிட்டனர். இதையடுத்து ரவிச்சந்திரன் தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து மத்திய பாகம் ஆய்வாளர் ஐயப்பன் தலைமையிலான போலீசார் தீவிர சோதனை நடத்தி, இரண்டு மணி நேரத்தில் முத்தையாபுரம் அருகே காரை விரட்டிப் பிடித்தனர். காவல்துறையினரை கண்டதும், திருட்டில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடிய நிலையில், அதில் மது போதையில் இருந்த தங்கதுரை என்ற நபர் மட்டும் சிக்கிக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர். கார் திருட்டில் ஈடுபட்ட மற்ற நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் கார் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: Autism Awareness Day : உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம் - ஊனம் நீக்கி உலகம் ஒன்றுபடுவோம்!