தென்காசி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கழுந்து விளை கிராமத்தைச் சேர்ந்த இஸ்ரவேல் மகன் பிரபாகரன். இவரது உறவினரின் குடும்பத்தில் ஜூன் 9ஆம் தேதி நடைபெற உள்ள திருமணத்திற்கு நகை எடுப்பதற்காக சங்கரன்கோவில் வழியாக கடையநல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை பிரபாகரன் ஓட்டிச் சென்றார். அவருடன் 2 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் காரில் இருந்தனர்.
மேலநீலிதநல்லூர் தனியார் கல்லூரி அருகே திருநெல்வேலி பிரதான சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று காரில் இருந்து புகை கிளம்பியது.
இதை அறிந்ததும் உடனே அவர்கள் காரை விட்டு கீழே இறங்கினர். அடுத்த சில நிமிடங்களில் தீ மளமளவென எரிந்து கார் முழுவதும் எரிந்து எலும்புக்கூடாக காட்சி அளித்தது. தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் குறித்து பனவடலிசத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காரில் இருந்து புகை வருவதை முதலிலேயே அறிந்து அவர்கள் காரை விட்டு வெளியேறியதால் 6 பேரும் உயிர் தப்பினர்.
இதையும் படிங்க:வேலை வாங்கி தருவதாக மோசடி: “ஆள வச்சி தூக்கிடுவேன்" - அதிர்ச்சி ஆடியோ