தூத்துக்குடி: போக்குவரத்து தொழிலாளர்கள் அரசுடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், திட்டமிட்டபடி இன்று (ஜன.9) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். அதன்படி, தமிழகம் முழுவதும் பேருந்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், போக்குவரத்துக் கழக ஊழியர்களின் கோரிக்கையை, அரசு பொங்கல் பண்டிகைக்கு பிறகு நிறைவேற்றி தரும் என்ற நம்பிக்கை இருப்பதால், அனைத்து பேருந்துகளும் தூத்துக்குடி மாவட்டத்தில் இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஆகிய 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 9ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.
தமிழக அரசு சார்பில், போக்குவரத்து கழகங்களுடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தோல்வியுற்ற நிலையில், 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை, நேற்று (ஜன.8) நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையிலும் சுமூக முடிவு எட்டப்படாததால், திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்தனர்.