விளாத்திகுளம் அருகே புதூரில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 263ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ராஜகம்பள மகாசபை சங்கம் சார்பில் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில், தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாட்டு வண்டிகளுடன் வீரர்கள் பங்கேற்றனர்.
பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியை, விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். பெரிய மாட்டுவண்டி பிரிவில் எட்டு ஜோடி காளைகள் பங்கேற்றன. இதில் முதல் பரிசினை, கொடிமங்கலத்தைச் சேர்ந்த திருப்பதி அம்பலம் மாட்டு வண்டியும், இரண்டாவது பரிசினை வெள்ளமாசபட்டியைச் சேர்ந்த வெள்ளைப்பாண்டி மாட்டு வண்டியும், மூன்றாவது பரிசினை நாளந்துலாவைச் சேர்ந்த துரைப்பாண்டி மாட்டு வண்டியும் தட்டிச் சென்றன.