ஆதிச்சநல்லூர்: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2020ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதையடுத்து அதற்கானப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் கடந்த வருடம் அகழாய்வுப் பணிகள் தொடங்கியது.
இந்த அகழாய்வுப் பணியில் 100க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், தங்க நெற்றி பட்டயம், சங்க கால வாழ்விடப் பகுதிகள், வெண்கலத்தால் ஆன நாய் உருவம், மான், ஆடு, நீர்க்கோழி, மீன் பிடிக்கப் பயன்படும் மீன் தூண்டில் முள், மரத்தால் ஆன கைப்பிடி கொண்ட கத்தி, இரும்பு வாள் என ஏராளமான பொருட்கள் கிடைத்தன. தற்போது அகழாய்வுப் பணியில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமுக்கள் தாழிகளை ஆவணப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் அகழாய்வுப் பணியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிறிய முதுமக்கள் தாழி திறக்கப்பட்டது. அதில் ஆய்வாளர்களை ஆச்சரியமூட்டும் விதமாக நான்கு வளையங்களைக் கொண்ட இந்த வெண்கல வளையல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முதுமக்கள் தாழி 30 செ.மீ அகலம் மற்றும் 58 செ.மீ உயரம் கொண்டது. இது வளைந்த மற்றும் விரல்தடம் பதித்த வாய்ப்பகுதி கொண்டதாக இருந்தது. இச்சிறிய அளவிலான ஈமத்தாழியில் இரண்டு மூன்று ஈமப்பொருட்களே வைக்கப்பட்டிருந்தது. இதன் உள்ளே மிகச்சிறிய அளவிலான மண்டை ஓட்டின் எலும்பு மற்றும் கை எலும்பு கிடைத்தது.