கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளை நோய்தொற்றில் இருந்து பேணி பாதுகாக்கின்ற வகையில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் எடுத்துவருகிறது. இன்றைய உலகத்தில் விரைவு உணவுகளையே மக்கள் விரும்பி உண்ணும் நேரத்தில் அதிலிருந்து அவர்களை மாற்றும் வகையில் பாரம்பரியமான ஊட்டசத்துள்ள உணவுகளை உண்ணவேண்டும் என்பதை வலியுறுத்தி மத்தியஅரசு குழந்தைகள் நல அமைச்சகத்தின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அங்கன்வாடி மையங்களில் கர்ப்பணி பெண்களுக்கு இது போன்ற ஊட்டசத்து உணவுபொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கர்ப்பிணி பெண்களின் கர்ப்ப காலமும், குழந்தை பிறந்தது முதல் 1000 நாட்கள் வரை தாய், சேய் என இருவரின் வளர்ச்சியும் கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில் தூத்துக்குடியில் தேவர்புரம் சாலையில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் ஊட்டச்சத்து உணவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி மதியம், மாலை என இரு வேளைகளிலும் உணவுடன் பால் கஞ்சி, மூலிகை கஞ்சி, முருங்கை சூப், வாழைத்தண்டு சூப், கம்பு கஞ்சி, கேப்பை கஞ்சி இப்படி ஏதேனும் ஒரு சிறப்பு ஊட்டச்சத்து உணவை இலவசமாக வழங்குகின்றனர்.