இயந்திர பழுதால் கடலில் கவிழ்ந்த படகு; 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்!! தூத்துக்குடி: திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரது நாட்டு படகில் நேற்று இரவு மீன் பிடிப்பதற்காக ரமேஷ், பிரதீப், செல்வம், ராபின் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை நடுக்கடல் பகுதியில் வலை வீசிக்கொண்டிருக்கும் போது படகில் இயந்திர பழுது ஏற்பட்டு படகில் கடல் நீர் புகுந்தது.
இதில் படகு முற்றிலுமாக கடலுக்குள் மூழ்கியுள்ளது. இதில் படகில் இருந்த ரமேஷ், செல்வம், பிரதீப், ராபின் ஆகிய நான்கு மீனவர்களும் போயா(மிதவை) பிடித்துக் கொண்டு சுமார் மூன்று மணி நேரம் கடலில் தத்தளித்துள்ளனர்.
அப்போது அந்த வழியாக வந்த தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நான்கு மீனவர்களையும் காப்பாற்றி தருவைகுளம் கடற்கரை பகுதிக்கு கொண்டு சென்றனர். பின்பு 4 பேருக்கும் அவர்களுக்கு முதலுதவிகள் செய்யப்பட்ட பின்னர் மீட்கப்பட்ட மீனவர்கள் திரேஸ்புரம் கடற்கரைக்கு திரும்பினர்.
படகில் கடல் நீர் புகுந்ததால் ஏற்பட்ட விபத்தில் ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான படகு மற்றும் வலைகள் கடலில் மூழ்கி தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறை தங்களுக்கு புதிய படகு வாங்க உதவி செய்ய வேண்டுமென பாதிக்கப்பட்ட மீனவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆழ்வார்திருநகரி கோயிலில் திருமலை நாயக்கரின் செப்புத் தகடுகள் கண்டெடுப்பு!