தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் மரணமடைந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே சிபிசிஐடி காவல் துறையினரால் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் உள்பட காவலர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளதால் முக்கிய ஆதாரங்களை திரட்ட சிபிஐ அலுவலர்கள் சாத்தான்குளம் காவல் நிலையம், சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மற்றும் கோவில்பட்டி கிளைச் சிறை உள்ளிட்ட பல இடங்களில் விசாரணை மேற்கொண்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில் உயிரிழந்த பென்னிக்ஸின் தாயார் செல்வராணியை சிபிஐ அலுவலர்கள் இன்று (செப்.01) திடீரென நெல்லை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது.
இதுகுறித்து காவல் துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, தந்தை-மகன் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த வழக்கில் செல்வராணிதான் முக்கிய புகார்தாரராக சேர்க்கப்பட்டுள்ளார். எனவே ஆவணங்கள் அடிப்படையிலும் உடல் பரிசோதனை அடிப்படையிலும், செல்வராணியின் கணவர்தான் ஜெயராஜ் என்பதும், செல்வராணியின் மகன்தான் பெனிக்ஸ் என்பதையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக இன்று அவருக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. இதில் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொண்டு முறைப்படி அதற்கான முடிவுகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றனர்.
இதையும் படிங்க:சாத்தான்குளம் விவகாரம்- ஜெயராஜ் மகளுக்கு அரசுப் பணி!