தூத்துக்குடி:அதிமுக ஆட்சி நடக்கும் போது கனிமொழி எம்.பி. மது பழக்கத்தினால் பல பெண்கள் விதவையாகி விட்டனர் என்றும், தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மதுவை தடை செய்வதாகவும் கூறினார்.இதனை கண்டித்து திமுகவின் துரோக திராவிட மாடல் ஆட்சி என கூறினார்.
பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா செய்தியாளர்களை சந்தித்தபோது: ’பாஜகவின் 8 ஆண்டுகால ஆட்சி மக்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. 2014இல் 7 மாநிலங்களில் மட்டும் வெற்றி பெற்றிருந்த பாஜக இன்றைய தினம் 18 மாநிலங்களில் வெற்றிபெற்று உலகிலேயே பெரிய கட்சியாக உள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடந்தாலும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மக்களுக்கு என்ன தேவை என்பதை மத்தியில் இருந்து பெற்றுக்கொடுத்து வருகிறார்.
கிட்டத்தட்ட நூறு நாடுகளுக்கு தடுப்பூசியை வழங்கியிருக்கக் கூடிய ஒரு நாடாக இந்தியாவை தலை நிமிர செய்திருப்பவர், பிரதமர் நரேந்திர மோடி. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஏழ்மை நிலை 22 விழுக்காடாக இருந்தது. பாஜக ஆட்சியில் ஏழ்மையின் நிலை 10 விழுக்காடாக குறைந்துள்ளது. தனிநபர் வருமானம் காங்கிரஸ் ஆட்சியில் ஒரு நபருக்கு ஆண்டுக்கு இருபத்து ஒன்பது ஆயிரமாக இருந்தது. தற்போதைய பாஜக ஆட்சியில் 30 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஜிஎஸ்டின் மூலமாக நமது நாட்டிற்கு பல லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது. இது பல பண முதலைகளின் கறுப்பு பணத்தை இன்று புறம் தள்ளியுள்ளது. ரயில்வே துறையில் மிகச் சிறந்த கட்டமைப்பில் உலகின் இரண்டாவது நாடாக இந்தியா திகழ்கிறது.
அண்ணாமலை என்றால் பயம்: இஸ்லாமியப் பெண்களுக்கு பாரதிய ஜனதா கட்சி செய்திருக்கும் மிகப்பெரிய பங்கு முத்தலாக் தடை சட்டம். இச்சட்டத்தின் மூலமாக இஸ்லாமியப் பெண்கள் மிகுந்த உரிமையையும், நம்பிக்கையையும் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் இன்று ஒவ்வொரு அமைச்சர்களும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையைப் பார்த்து பயந்து நடுங்கிக் கொண்டு இருக்கின்றனர். திமுக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது.