தூத்துக்குடி:பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டுக் கால சாதனை விளக்க நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகத் தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, மற்றும் ஆர்.சசிகலா புஷ்பா ஆகியோர் அனைவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்ற 9 ஆண்டு காலத்திற்குப் பின் இதுவரையில் கிட்டத்தட்ட 48.9 கோடி பேருக்கும் மேலாக வங்கி கணக்கு தொடங்கப்பட்டு உள்ளது. சில பேர் சாத்தியமா என்று கேட்டனர். ஆனால் அதை மோடி அவர்கள் நடைமுறைப்படுத்தினார். ‘தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்று சொன்னால் ஜகத்தையே அழித்துவிட வேண்டும்’ என்று பாரதி சொன்னார்.
அதன் படி, இந்தியாவில் வாழும் 80 கோடிக்கும் மேலான ஏழை, எளிய மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல, வாஜ்பாய் காலத்தில் தங்க நாற்கர சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன் பின் இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் கட்சி ஒரு ரோடு கூட போடவில்லை. ஆனால் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி தங்க நாற்கர சாலையைப் போட்டது. இதனால் தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலிக்கு 25 நிமிடத்தில் போய்விடலாம்.
திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவிலுக்கு 50 நிமிடத்தில் சென்று விடலாம். நாடு முன்னேற வேண்டும் என்றால் அந்த நாட்டினுடைய உள் கட்டமைப்பு, மேம்பாடு வசதி இருந்தால் நாடு முன்னேறும். இதனால் எதிர்காலத்தில் போக்குவரத்து சாலையில் இருக்கின்ற நிலங்களின் விலை மதிப்பு அதிகமாகும். ஒன்பதாண்டுகளுக்கு முன்பு கூரை வீடுகள் நிறைய இருந்தது. ஆனால் தற்போது நரேந்திர மோடி ஆட்சி ஏற்ற பின்பு கூரை வீடு இல்லாத இடமாக எல்லோருக்கும் குடியிருக்கும் வீடு கட்டும் திட்டத்தைப் பிரதமர் தந்துள்ளார்.
மேலும், சமையல் செய்யும் பெண்கள் அடுப்பினால் சுவாசக் கோளாறு நோய்கள் ஏற்படுகின்ற காரணத்தினால் அனைவருக்கும் இலவசமாக கேஸ் அடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்ல பெண்களுக்குச் சுகாதார வசதி ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நாப்கின் வசதி, வீடுகளில் கழிவறை திட்டம் போன்றவற்றைப் பிரதமர் கொண்டு வந்தார். இதனால் பொருளாதார ரீதியில் உலகத்தில் ஐந்தாவது பெரிய நாடாக உயர்ந்து நிற்கிறது இந்தியா.