தூத்துக்குடி: முத்துகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவர் அப்பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தூத்துக்குடி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலரும், பாஜக மாநில பொருளாதார பிரிவு செயலாளருமான வி.எஸ்.ஆர்.பிரபு என்பவருடன் நட்புடன் பழகி வந்துள்ளார்.
இந்நிலையில், பிரபு தனது அவசர தேவைக்காக 2012ஆம் ஆண்டு ரூ.5 லட்சம் பணத்தை கடனாக கேட்டுள்ளார். இதற்கு பால் வியாபாரி எனது குழந்தைகள் படிப்பு செலவிற்கு வைத்திருந்த பணம் வைத்திருந்தாகவும், அதை கடனாக தர வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார். மீண்டும் அவரிடம் 2 மாதத்தில் கண்டிப்பாக கொடுத்து விடுவதாக கூறிய வி.எஸ்.ஆர்.பிரபு ரூ.5 லட்சம் ரூபாயை அவரிடமிருந்து பெற்றுள்ளார். மேலும், வாங்கிய பணத்தை திருப்பி அளிப்பதாகக் கூறிய அவர், பரமசிவத்திடம் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 2 காசோலை கொடுத்துள்ளார்.
பின்னர் அதனைப் பெற்றுக் கொண்டு வங்கியில் சென்று பணம் எடுக்கச் சென்றுள்ளார். இந்த நிலையில், வி.எஸ்.ஆர்.பிரபு அளித்த காசோலைக்கு பணம் இல்லாத நிலையில் வங்கி அதிகாரிகள் அதனை திருப்பி அளித்துள்ளனர். இதனையடுத்து, தூத்துக்குடி விரைவு நீதிமன்றம் 1-ல் பரமசிவம், நடந்தவை குறித்து வழக்கு தொடர்ந்தார். இவரது சார்பில் வழக்கறிஞர் சுபேந்திரன் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடி வந்தார். இந்த வழக்கு, 11 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் 13ஆம் தேதி நீதிபதி செல்வி ஜலதி வழக்கை விசாரித்து தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில், ரூ.10 லட்சத்தை ஒரு மாத காலத்திற்குள் பரமசிவத்திற்கு வழங்க வேண்டும். மேலும், இரண்டு ஆண்டு சிறை தண்டனையையும் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார்.