தூத்துக்குடி:மத்திய அரசு பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா கொண்டு வந்ததற்கு வரவேற்பு தெரிவித்து தூத்துக்குடியில் பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஸ்பா தலைமையில் அக்கட்சி மகளிர் அணியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
பின்னர், பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஸ்பா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,"பெண்களுக்கு அரசியல் சுதந்திரத்தை கொடுக்கும் வகையில் வேறு எந்த கட்சியும் செய்யாத வகையாக நாம் அதை முடித்து வைத்துள்ளோம். சட்டமன்றத்திலேயே மூன்றில் ஒரு பங்கு அதாவது 33% பெண்களுக்கு ஒரு அரசியல் முன்னேற்றத்தை பாஜக அரசாங்கம் வழங்கி இருப்பது மிக பொன்னான விஷயம்.
இதன் மூலம் அதிகப்படியான பெண்கள் அரசியலுக்கு வரக்கூடிய வாய்ப்பை பாஜக வழங்கி இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெண்கள் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள பெண்கள் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள அனைத்து பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மோடியினுடைய பாஜக அரசாங்கம் சரியான ஒரு முடிவை சரியான நேரத்தில் கொடுத்தது எங்களுக்கு விநாயகர் சதுர்த்தி பரிசு மாதிரி.
அதிமுக பாஜக கூட்டணி:பெண்களின் சுதந்திரத்தை பற்றி பேசிய பாரதி பிறந்த இந்த தூத்துக்குடி மண்ணில் இருந்து பாரத பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறோம். பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை தலைவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை தான் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏற்று கொள்வோம், பேசுவோம்.
தலை இல்லாமல் வால் ஆடாது. தலை இல்லாமல் வால் ஆடுகிறது என்று சொன்னால் அது தலையால் சொல்லப்பட்டு ஆடப்பட்டதா? இல்லை தானாக ஆடுகிறதா? எப்படி இருந்தாலும் தலை ஒழுங்காக இருந்தால் வால் ஒழுங்காக இருக்கும். மாநில தலைவர் சிறப்பான முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்கக் கூடியவர்.