தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரபட்டினம் முத்தாரம்மன் ஆடி கோடை விழாவிற்கு அனுமதி வழங்க கோரி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், நிர்வாகிகள் இன்று (ஜூலை27) தூத்துக்குடி கூடுதல் ஆட்சியர் விஷ்ணு சந்திரனை சந்தித்து மனு அளித்தனர்.
இது குறித்து பேசிய பாஜகவினர், “ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தற்போது நெல் அறுவடை காலமாகும். இந்தக் காலகட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் அறுவடை செய்யப்படும் நெல் மூட்டைகளை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என பல கட்டங்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம். அதை வலியுறுத்தி இன்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட கூடுதல் ஆட்சியரும் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் அரசு நேரடி கொள்முதல் நெல் நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். கொள்முதல் நிலையம் அமைப்பதற்கு தேவையான இடத்தினை தேர்வு செய்து தரும்படிம் கூறியுள்ளார். அதன்படி விரைவாக நாங்கள் இடத்தை தேர்வு செய்து மாவட்ட அலுவலகத்திற்கு தகவல் தெரிவிப்போம்.
இதைபோல குலசேகரபட்டினம் முத்தாரம்மன் ஆடி கொடை விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஆகவே இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி இன்றி, கட்டுப்பாடுகளுடன் பூஜைகள் மட்டும் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளோம். அதனடிப்படையிலும் மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூடுதல் ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்” என்றனர்.