தூத்துக்குடி: என் மண் என் மக்கள் நடைபயண யாத்திரையை பாஜக தலைவர் அண்ணாமலை இரண்டாம் கட்டமாக இன்று (செப்.4) தென்காசியில் இருந்து மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகை குளம் வருகை தந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “கடந்த சில நாட்களுக்கு முன்னர் நெல்லையில் இளைஞரணி செயலாளராக இருந்த ஜெகன் வெட்டி படுகொலை செய்யயப்பட்டார். அதைத் தொடர்ந்து, நேற்று இரவு (செப்.3) திருப்பூரில் உள்ள பல்லடத்தில் பாஜகவை சேர்ந்த மோகன் ராஜா என்ற கிளை தலைவர் அவரது தம்பி, அம்மா, சித்தி ஆகிய 4 பேரும் கூலிப் படையினரால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு எங்கே போகின்றது. கொங்கு வரலாற்றில் இதைப் போன்ற அருவாள் வெட்டு சம்பவத்தை யாரும் பார்த்தது கிடையாது. தமிழகம் முழுவதும் குடிகார நாடாக மாறி இருக்கிறது. இது வெட்கி தலை குனிய வேண்டிய சம்பவம். தமிழகம் வன்முறை கலாச்சார மாநிலமாக மாறி இருக்கிறது. இதற்கு அடிப்படை குடி, இதனால் தான் எல்லோரும் அருவாளை தூக்கி இருக்கிறார்கள். இதனை மாநில அரசு நிச்சயம் கவனத்தில் கொண்டுவர வேண்டும்.
இனியாவது திமுக தன்னுடைய நிலையை மாற்றிக் கொண்டு, குடியில் இருந்து விடுதலைக் கொடுக்க வேண்டும்.
கடந்த தினத்தில் சபாநாயகர் முன்பு ஒரு பெண் கந்து வட்டி கொடுமையால் தீக்குளிப்பதற்கு முயற்சி எடுத்து இருக்கின்றார். இதையெல்லாம் தமிழகத்தில் பேச வேண்டி உள்ளது. தமிழகத்தில் வன்முறை, குடி, அருவாள் கலாச்சாரம் என நிறைய பிரச்னை இருக்கிறது.
முதலில் தமிழ்நாட்டைப் பற்றி பேச வேண்டும். தமிழ்நாட்டு பிரச்னையை வைத்து ஓட்டு கேட்டால், 2024 தேர்தலில் ஒரு ஓட்டு கூட மக்கள் போட மாட்டார்கள் என்று தெரிந்து கொண்டிருக்கின்றார் தமிழக முதலமைச்சர். ஒரு முதலமைச்சர் ஆட்சிக்கு வந்து முப்பது மாதங்களாகியும், செய்த சாதனை பற்றி பேசாமல் கூட்டணி பற்றி பேசுகின்றேன் என்று கிளம்பி இருக்கின்றார்.
முதல்வருக்கு இப்போதே தெரிந்திருக்கும், 2024 தேர்தலில் தமிழகம் பற்றி பேசினால் திமுக வாஸ் அவுட் ஆகிவிடும் என்று. அதனால் தான் அவர் இந்தியாவைப் பற்றி பேசுகின்றார். முதலமைச்சர் இந்தியா பற்றி பேசுவதற்கு முன் தமிழ்நாட்டைப் பற்றி பேச வேண்டும். இந்தியா பற்றி பேச 140 கோடி மக்கள் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் லஞ்சம் என்பது தலைவிரித்து ஆடுகிறது. எனவே அதை பற்றித் தான் பேச வேண்டும்.
ராகுல் காந்தி, தொடர்ந்து மோடி சமுதாயத்தை இழிவுப்படுத்தி விட்டு நான் அப்படி சொல்லல, இப்படி சொல்லல என மழுப்புகிறார். சுப்ரீம் கோர்ட் ராகுல் காந்தியை நிரபராதி இல்லை என்றும் ஆனால் அவரை பதவி நீக்கம் செய்தால் மீண்டும் ஒரு தேர்தலைக் கொண்டு வந்து, வாக்காளர்களுக்கு தொந்தரவு கொடுக்க உச்ச நீதிமன்றம் விரும்பவில்லை அதற்காக அந்த பதவியை திரும்பக் கொடுக்கிறோம் என்று சொன்னார்கள்.
மேலும் வட இந்தியாவிற்கு சீனியர், ராகுல் காந்தி என்றால் தென் தமிழகத்திற்கு ஜூனியர் உதயநிதி. இவர்கள் எல்லாம் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி கஷ்டப்பட்டு உழைச்சு வச்சா, அத வச்சு நோகாம அரசியலுக்கு வந்து விடுகிறார்கள். அதனால் தான் எது தப்பு, எது சரி என்பது தெரியவில்லை. சனாதன தர்மம் என்றால் இந்துத்துவா என்று புதிய விளக்கம் அளிக்கிறார்.