தூத்துக்குடி:கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் பாஜக சார்பில் நடைபெறும் சிறுபான்மையினர் இணைப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை விமானம் மூலம் தூத்துக்குடி இன்று (ஜன.2) வந்தார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர் கூறுகையில், "பாஜக அனைத்து மதத்திற்கும் பொதுவானதாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் திமுகவின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது ஒரு மதத்திற்கு மட்டும் எதிராக செயல்படுகிறதோ எனத் தோன்றுகிறது.
திமுக அமைச்சர் சேகர்பாபு அறநிலையத்துறையின் செயல்பாடுகளுக்கு நான் தடைக்கல்லாக இருப்பதாக கூறிய சொல்லையே அவர், அவரைப் பார்த்து திரும்ப கேட்டுக்கொள்ள வேண்டும்.
பாஜகவைப் பொறுத்தவரையில் இந்து, கிறிஸ்தவம், இஸ்லாமியம் உள்பட அனைத்து மதமும் முக்கியம் என்றே கருதுகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் திமுகவின் 'பி' டீமாக மாறிவிட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த குற்றச்சாட்டில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவ்வப்போது திமுகவைக் குறைகூறுவது போல் அக்கட்சி மாநிலத் தலைவர் அறிக்கைகள் விடுகிறார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி அடித்தளம் இல்லாத கட்சியாக மாறிவிட்டது. திமுக சொல்வதை கிளிப்பிள்ளை போல் கேட்டு செயல்படுவதே காங்கிரஸின் வாடிக்கையாகிவிட்டது.
பாஜகவின் வேண்டுகோளின்படி வரி நிறுத்தி வைப்பு
அனைத்து மாநில பிரதிநிதிகள் கலந்துகொண்டு ஜிஎஸ்டி வரி குறித்த முடிவுகளை எடுக்கின்றனர்.