தூத்துக்குடி: தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து தினமும் 240-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குச் செல்கின்றன. இந்தப் படகுகளில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
மீன்பிடித்தொழிலில் கிடைக்கும் லாப, நஷ்டத்தில் உரிமையாளர்களுக்கு 61 சதவீதமும் தொழிலாளர்களுக்கு 39 சதவீதமும் என்ற அடிப்படையில் பங்கு பணம் பிரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இதில், ஒவ்வொரு படகுக்கும் வட்ட பணம் என்ற பெயரில், தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய 10 முதல் 14 சதவீதத் தொகையை, உரிமையாளர்கள் பிடித்தம் செய்வதாக, மீன்பிடித் தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தங்களுக்கு வர வேண்டிய பணம் அதிகளவு பிடித்தம் செய்யப்படுவதால், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.
அதிகளவு பணம் பிடித்தம் செய்யப்படுவதை நிறுத்த வேண்டும் எனவும்; 6 சதவீதம் மட்டுமே வட்டப் பணம் பிடித்த செய்ய வேண்டும் என்றும்; 6 நாட்களும் மீன்பிடித் தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ள மீனவர்கள், இகுறித்து மீன்வளத்துறை உதவி இயக்குநர் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.