தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் ஏழு லட்சம் மதிப்பிலான, 420 கிலோ புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
எட்டயபுரம் பகுதிகளில் சட்டவிரோதமாகப் புகையிலைப் பொருள்கள் கடத்தப்படுவதாக, விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷூக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல் உதவி ஆய்வாளர்கள் பொன்ராஜ், விஜயராஜ் தலைமையிலான காவல்துறையினர், எட்டயபுரம் பேருந்து நிலையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாகக் காய்கறி ஏற்றி வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, காலிபிளவர் காய்கறி மூட்டைகளுக்குள் ரூபாய் ஏழு லட்சம் மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா புகையிலைப் பொருள்கள், 24 சாக்கு பைகளில் 420 கிலோ பதுக்கி, கடத்தி வந்தது தெரியவந்தது.