தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையில் 400-க்கும் மேற்பட்ட படகுகளில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மீன்பிடித் தொழிலில் ஈடுப்பட்டுள்ளனர். பெரியதாழை கடல் பகுதியில் அடிக்கடி ஏற்படும் கடல் அலை சீற்றத்தால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்படுவதுடன் உயிரிழப்பும் ஏற்பட்டுவருகிறது.
இதுகுறித்து மீனவர்கள் அளித்த புகாரையடுத்து கடந்த ஐந்தாண்டுகளில் ரூ. 25 கோடியில் மேற்கு பகுதியில் 800 மீட்டர் அளவிலும், கிழக்கு பகுதியில் 200 மீட்டர் அளவிலும் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டது. ஆனால், குறைவாக அமைக்கப்பட்ட பகுதியில் கடல் சீற்றம் அதிகரிப்பால் கடற்கரையில் மணல் அரிப்பு ஏற்படுவதால் படகுகளை நிறுத்த முடியாத நிலை உருவானது.
இதனைத்தொடர்ந்து மீனவர்களின் கோரிக்கையின் படி பெரியதாழை கடல் மேற்கு பகுதியில் 360 மீட்டர் அளவிலும், கிழக்கு பகுதியில் 240 மீட்டர் அளவிலும் தூண்டில் வளைவை மேலும் நீட்டித்து அமைக்க, திட்டமிடப்பட்டு ரூ. 30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த நவம்பர் 11ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரியதாழையில் தூண்டில் பாலம் அமைப்பதற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.