தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓவியங்களால் மின்னும் சுவர்கள்: கல்வி கற்க கலைநயமிக்க ஒரு பள்ளி - attractive painting on govt school

அச்சு அசலாக ரயில் போலவே இருக்கும் லெவிஞ்சிபுரம் தொடக்கப்பள்ளியும், அங்கன்வாடியும் மாணவர்களிடையே மட்டுமின்றி பொதுமக்களிடையேயும் பிரபலமடைந்துவருகிறது. ஓவியங்களைத் தன் மீது பூசிக்கொண்ட இவைதான் இப்போது அப்பகுதியில் ஹாட் டாபிக்.

கல்வி கற்க கலைநயமிக்க ஒரு பள்ளி
கல்வி கற்க கலைநயமிக்க ஒரு பள்ளி

By

Published : Dec 18, 2020, 6:45 AM IST

Updated : Dec 21, 2020, 10:38 PM IST

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ், தூத்துக்குடியின் சீர்மிகு தோற்றத்திற்கான பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுவருகின்றன. இதில் குறிப்பிடும்படியாக அமைந்துள்ளது விழிப்புணர்வுச் சுவர் ஓவியங்கள். இவற்றைப் பார்த்தவுடன் ஒரு நிமிடம் நின்று சிலாகிக்கச் செய்யும் அளவுக்கு தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன.

மாநகராட்சி சார்பில், மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த நடவடிக்கைகளைப் போலவே கல்வித் துறை சார்பிலும் பள்ளிகளில் அழகோவியங்கள் வரையப்பட்டுள்ளன. மாநகராட்சிப் பகுதியில் லெவிஞ்சிபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி சுவர்களிலும் குழந்தைகளைக் கவரும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. பள்ளியின் கழிவறைச் சுவரில் தூய்மை பாரத இயக்கத்தின் குறிக்கோள்களை உணர்த்தும் வகையில் கழிப்பறையைப் பயன்படுத்துதல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை வலியுறுத்திப் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

அடடே! ஓவியமா?

இது தவிர பள்ளியில் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தும்விதமாக பள்ளிச்சுவர்களில் தொடர்வண்டிபோல அச்சு அசலான ஓவியம் வரையப்பட்டுள்ளது. அங்கன்வாடி குழந்தைகளுக்குப் பிடிக்கும்விதத்தில் சோட்டா பீம், டோரா, புஜ்ஜி போன்ற கார்ட்டூன் சித்திரங்களும் பள்ளியின் சுவரில் வரையப்பட்டுள்ளன.

விவசாயம்

தமிழ்நாட்டின் பிரதான தொழிலான வேளாண்மையை உணர்த்தும் வகையில் ஏர் உழுதல், இயற்கைப் பேணல் உள்ளிட்ட கருத்துகளை வலியுறுத்தியும், கடல் வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதை மாணாக்கருக்கு உணர்த்தும்விதமாகவும் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் பள்ளியின் தோற்றத்தையே அடுத்தநிலைக்கு எடுத்துச் சென்றுள்ளது என்றால் மிகையல்ல. சீர்மிகு நகரம் திட்டத்தில் அல்லாமல் பள்ளிகளை அழகுப்படுத்த மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை பற்றி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞான கௌரியிடம் கேட்டோம்.

மாணவர்களுக்கு கற்றலில் இனிமை, மகிழ்வான மனநிலையைத் தரும் நோக்கில் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளில் புதுமை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ”மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு கல்வியாண்டிலும் தேர்ந்தெடுக்கப்படும் பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் இந்தப் பணிகள் ஒதுக்கப்பட்டு நடைபெறும்.

பள்ளிச் சுவரில் மிதக்கும் மீன்கள்

லெவிஞ்சிபுரம் மாநகராட்சிப் பள்ளி உள்பட தூத்துக்குடி மாவட்டத்தில் 32 பள்ளிகள் அழகுப்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்டு புதுமை ஓவியங்கள் வரையப்பட்டு பள்ளிச்சுவர்கள் மெருகேற்றப்பட்டுள்ளன. பள்ளிச் சுவர்களின் நீள, அகலம், உயரங்களைப் பொறுத்து சதுர அடிக்கு ரூ.60 கூலி பேசப்பட்டு ஓவியம் தீட்டும் பணிகள் நடைபெறுகின்றன.

இந்தப் பணிக்காக இதுவரை 32 லட்சத்து 46 ஆயிரத்து 120 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியின் மூலமாக, தனியார் பள்ளியில் பயிலும் அனுபவத்தை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தர முடிகிறது” என்கிறார் ஞான கௌரி.

'கற்றலில் இனிமை ஏற்பட்டாலே மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண முடியும்' என்பதே லெவஞ்சிப்புரம் தொடக்கப்பள்ளியின் மாற்றத்திற்கு முக்கியக் காரணம். இது தவிர அதிநவீன கணினி ஆய்வகம், அதிவேக இணையதள வசதி உள்பட பல்வேறு அம்சங்களுடன் அரசுப்பள்ளிகள் சீரமைக்கப்பட்டுவருகின்றன.

கல்வி கற்க கலைநயமிக்க ஒரு பள்ளி!

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் அறிவை மேம்படுத்துவதற்காகத் திறனறித் தேர்வு நடத்துவதாகத் தெரிவிக்கும் முதன்மைக் கல்வி அலுவலர், மாணவர்களை நீட் தேர்வுக்குத் தயார்செய்யும் வகையிலும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாகக் கூறினார்.

கற்றலில் இனிமையைத் தர காத்திருக்கும் அரசுப் பள்ளிகளின் சுவர்கள் தன் மீது அழகோவியங்கள் பூசிக் கொண்டு பள்ளித்திறப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறது. தற்போது அங்கு பயிலும் மாணவர்கள் எப்போது பள்ளி திறக்கும் என ஆவலுடன் காத்திருக்கத் தொடங்கிவிட்டனர். தனியார் பள்ளிகளைக் காட்டிலும் அரசுப்பள்ளி தரமானதாக இருப்பது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:இந்த மெட்ரோ ரயில்ல பயணம் செய்ய முடியாது... ஆனால் படிக்கலாம்!

Last Updated : Dec 21, 2020, 10:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details