தூத்துக்குடி:தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் கலை வடிவங்களை அறிமுகப்படுத்தவும், மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொண்டு வரவும் பள்ளிக் கல்வி துறை சார்பில் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக கலை பண்பாட்டு கொண்டாட்டங்களை ஊக்குவித்து வரப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் 9 வகுப்பு வரை கலை பயிற்சிகளும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை கலை திருவிழா போட்டிகளும் நடைபெற்று வருகிறது.
இதனையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் வட்டார அளவில் நடைபெறும் இப்போட்டியின் துவக்க விழா வ.உ.சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இக்கலை திருவிழாவை கோவில்பட்டி நகர மன்ற தலைவர் கருணாநிதி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது கலை திறன்களை வெளிப்படுத்தினர்.
இதில் வ.உ.சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் புல்லாங்குழல் இசைத்தும், பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் பறை இசைத்தும் ,போதை விழிப்புணர்வு குறித்து வில்லுப்பாட்டு பாடியும் அசத்தினர்.தமிழ்நாட்டின் பாரம்பரிய கலை வடிவங்கள் மற்றும் பண்பாடு குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள இச் செயல்பாடுகள் வழிவகுக்கும்.
அரசுப்பள்ளி கலை விழாவில் பறை இசைத்து அசத்திய பள்ளி மாணவிகள் போட்டிகளில் வட்டார அளவில் வெற்றி பெறும் மாணவர்களை மாவட்ட அளவிலும், மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளிலும் பங்கேற்பார்கள் என ஆசிரியர்கள் தெரிவித்தன. இந்நிகழ்வில், மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜன் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சின்னராசு, பத்மாவதி, மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:மழைக் காலங்களில் பாதுகாப்பாக இருப்பது எப்படி? - சீர்காழி பள்ளியில் ஒத்திகை!