கோவில்பட்டி:தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த 65 வயது மூதாட்டி ஒருவர், கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 19ஆம் தேதி மூதாட்டி வீட்டின் மாடிப்படி அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் தனிப்படை அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க நபர் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில், அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் சம்பவத்தன்று மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்த நபர், அவரை பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் இதை யாரிடமாவது சொல்லி விடுவார் என நினைத்து கொலை செய்ததாக ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.