தூத்துக்குடி: கருப்பட்டி சொசைட்டியிலுள்ள பனை பொருள் அங்காடியை, இன்று பனை வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த எர்ணாவூர் நாராயணன், “கடந்த மாதம் 23 அன்று தமிழக பனை தொழிலாளர்கள் நல வாரிய தலைவராக பொறுப்பெற்று, இன்று உறுப்பினர்களை சேர்க்க தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை புரிந்தேன்.
இன்று உறுப்பினர் சேர்க்கை முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கடந்த 10 வருடங்களாக பனை தொழிலாளர்கள் நல வாரியம் செயல்படவில்லை. ஆகையால் 10 வருடங்களாக 10ஆயிரம் பேர்தான் உள்ளனர். மேலும் சேலம், ஈரோடு, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 1 லட்சம் உறுப்பினர்களைச் சேர்ப்பதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களுக்கு பனை தொழிலாளர் நல வாரியம் இருப்பதே தெரியாமல் உள்ளது. இதற்கு கிராமம் கிராமமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, முகாம் நடத்தப்படும். கல்வி, திருமண உதவி என அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு மூலம் செய்து கொடுக்கப்படும். கடந்த 2006 ஆம் ஆண்டு மட்டுமே நல வாரியம் ஐந்து ஆண்டுகள் செயல்பட்டுள்ளது.