தீபாவளி பண்டிகை தொடங்க இன்னும் ஒரு வாரங்களே உள்ள நிலையில், துணிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. புதிய விதமான ஆடைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் முக்கியப் பகுதிகளில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாநகரப் பகுதியில் மக்கள் அச்சமின்றி கடைகளுக்கு வந்து செல்லவும், திருட்டுச் சம்பவத்தை குறைக்கவும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட ரோந்து வாகனத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று(நவ. 09) தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்பதை தொடர்ந்து அறிவுறுத்திவருகிறோம்.
இந்த நேரங்களில் பொதுமக்களுடைய கவனத்தை திசை திருப்பி திருடர்கள் கைவரிசையைக் காட்டும் சூழ்நிலை ஏற்படலாம். இதனைத் தடுக்கும் வகையில் 2 வாகனங்களில் தலா 4 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள ரோந்து வாகனங்கள் மாநகரம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடும்.