தூத்துக்குடி:தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் கழிவுகளால் மாசுபட்ட 12 இடங்களை அபாயகரமான பகுதிகளாக அறிவிக்க வேண்டும் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த பேராசிரியை பாத்திமா பாபு, வணிகர் சங்க நிர்வாகி ராஜா ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்தித்து இன்று சந்தித்து மனு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர்கள் பேசுகையில், "ஸ்டெர்லைட் காப்பர் ஆலையின் மாசுபாடு, அந்த நிறுவனம் சட்டவிரோதமாக கழிவுகளை அகற்றும் முறை காரணமாக தூத்துக்குடியில் குறைந்தபட்சம் 12 இடங்களைத் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் அபாயகரமான கழிவுகளால் மாசுபட்ட பகுதிகள் என்று அறிவிக்க வேண்டிய அவசரச் சூழல் நிலவுகிறது.
இவற்றுள் மாசுகட்டுப்பாட்டு வாரியமே மாதிரிகள் எடுத்து ஆய்வு செய்த 6 இடங்களும் அடங்கும். அபாயகரமான கழிவுகளால் மாசுபட்ட நிலையில் இருக்கும் அனைத்து பகுதிகளும் சீர்செய்யும் பணிகள் நிறைவு பெறும்வரை, அப்பகுதிகளைப் பொதுமக்கள் பயன்படுத்தாத வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கால்நடைகளும் அங்கே நுழையாத வண்ணம் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பாக மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளோம்" என தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் கொடுத்த மனுவில், "ஸ்டெர்லைட் ஆலையின் எல்லைகளை ஒட்டியுள்ள நிலங்கள், மீளவிட்டானில் உள்ள கலங்கரை ஓடை போன்ற பொது ஓடைகள், தெற்கு வீரபாண்டியபுரத்தில் உள்ள குடியிருப்பு சொத்து, தூத்துக்குடியில் அனுமதியின்றி ஸ்டெர்லைட் கழிவுகள் கொட்டப்பட்ட பகுதிகள் என 12 பகுதிகளில், ஆர்சனிக், தாமிரம், குரோமியம், ஈயம், நிக்கல், துத்தநாகம் ஆகியவற்றில் குறைந்தது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை, அபாயகரமான கழிவுகளால் மாசுபட்ட பகுதிகளுக்கான அரசு தர நிர்ணய அளவை விட அதிகமாக இருக்கின்றன.