கடந்த 18ஆம் தேதி மினிகாய் தீவு கடல் பகுதியில் சிறைப்பிடிக்கப்பட்ட தருவைகுளம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் தமிழ்நாடு அரசின் முயற்சியால் உடனடியாக விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இன்று (நவ. 26) தருவைகுளம் கிராமத்திற்கு வந்தபோது அவர்களை அமைச்சர் கடம்பூர் ராஜு வரவேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக இருப்பதன் காரணமாகவே இதுபோன்ற முயற்சிகளை செயல்படுத்த முடிகிறது. மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கையால் இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது.
கரோனா தடைக்கால நிவாரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 46 ஆயிரத்து 226 மீனவர்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மீன்பிடித் தடைக்கால நிவாரணம் நான்காயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. தருவைகுளத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பில் மீன்பிடி இறங்கு தளம் அமைக்கும் பணி, ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பில் ஐஸ் பிளாண்ட் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்.
மீனவர்களுக்காக 100 கோடி ரூபாயில் பல்வேறு திட்டம் அறிவிப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் அனைத்து மீனவர்களுக்கும் சாட்டிலைட் போன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் மீனவர்களுக்காக 100 கோடி ரூபாயில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன" என்றார்.
இதையும் படிங்க:ஏழு மாவட்டங்களில் மீண்டும் பேருந்து சேவை தொடக்கம்