தூத்துக்குடி:பாஜக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று தூத்துக்குடிக்கு வருகை புரிந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறுகையில், "மோடி என்ற பெயர் கொண்ட அனைவருமே கொள்ளையர்கள் என்று ராகுல் காந்தி பேசியது தொடர்பாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி எம்.பி. பதவியில் இருக்கும் தகுதியை ராகுல் காந்தி இழந்து உள்ளார். இதை நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், நாடாளுமன்ற சபாநாயகர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இந்தியாவின் உச்சபட்ச காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்த ராகுல் காந்திக்கும் இந்த உத்தரவு பொருந்தும். அரசை எதிர்த்து கார்ட்டூன் மீம் போடுபவர் அனைவருமே நள்ளிரவு இரண்டு மணிக்கு கைது செய்யும் போது சட்டம் பொருந்தும் என்றால் ராகுல் காந்திக்கும் இந்த சட்டம் பொருந்தும்.
ராகுல் காந்தி பொதுவாக இந்த விவகாரத்தை அவர்களாகவே ஏற்படுத்தி கொண்டு உள்ளனர். சௌகித்தார் என்ற விவகாரம் தொடர்பாக பேசும் போது நீதிமன்றம் ராகுல் காந்திக்கு ஏற்கனவே எச்சரிக்கை கொடுத்தது. சட்டம் அனைவருக்கும் பொருந்தும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆகையால் சாதாரண மனிதனுக்கும், ராகுல் காந்திக்கும் சட்டம் பொருந்தும் என்பதே சரி என்றார்.