தூத்துக்குடி: தமிழகம் முழுவதும் பாஜக சார்பில், "என் மண், என் மக்கள்" என்ற பெயரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அனைத்து தொகுதிகளுக்கும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 13) காலை தூத்துக்குடி மாநகராட்சி அருகில் இருந்து நடைபயணம் தொடங்கினார்.
நடைபயணத்தின் போது அவர் பேசுகையில், "தமிழகத்தில் உள்ள மக்களை குடிக்க வைத்து அதன் மூலமாக திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்து வருகின்றனர். மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி எம்.பி கனிமொழி கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது.
மணல் கொள்ளையை தடுக்கச் சென்ற அரசு அதிகாரி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். நாட்டிலேயே அதிக அளவில் கடன் வாங்கியதில் இரண்டாவது மாநிலமாக தமிழகம் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழகத்தில் எந்த தனியார் தொழில் நிறுவனங்களும் தொழில் தொடங்க வரவில்லை. குறிப்பாக தென் தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது இல்லாத நிலையே உள்ளது.
மதுவுக்கு அடிமையாகி அரசு நடத்தக் கூடிய மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் சேர்ந்து நன்றாக குணமாகி வெளியே வந்தால், அரசு வேலை என்கின்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். இதனால், விடிய விடிய குரூப் 4 தேர்வுக்கு படித்த எனக்கு வேலை இல்லை, ஆனால் மது குடிப்பவர்களுக்கு அரசு வேலையா? என இளைஞர்கள் கேட்கின்றனர்.