தூத்துக்குடி: 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களைப்போற்றும் வகையிலும், வெகு விமரிசையாக கொண்டாடும் வகையில் அனைவரும் வீடுகளில் வரும் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், இந்தியாவில் உள்ள தபால் நிலையங்களிலும் தேசியக்கொடிகள் விற்பனை நடைபெற்று வருகிறது.
அனைவரும் நாட்டுப்பற்றுடன் இருக்க வேண்டும் என்றும்; சுதந்திரப்போராட்ட வீரர்களின் தியாகத்தினை போற்ற வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாக, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தாரில் முன்னாள் ராணுவ வீரர் அய்யலுசாமி என்பவர், தனது வீட்டின் முகப்பு சுற்றுச்சுவர் முழுவதும் தேசியக்கொடியை வரைந்து, தனது நாட்டுப்பற்றினை வெளிப்படுத்தியுள்ளார்.
1970 முதல் 1986 வரை ராணுவத்தில் பணியாற்றியுள்ள அய்யலுசாமி. 1971இல் நடைபெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் போரின்போது பங்கேற்றுள்ளார். தேசபக்தி, நாட்டுப்பற்று மிக்க அய்யலுசாமியின் இந்த செயலை அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் பாராட்டியுள்ளது மட்டுமின்றி, அவரின் வீட்டைக்கடந்து செல்பவர்கள் தேசியக்கொடிக்கு சல்யூட் செய்து செல்கின்றனர்.