தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவியருக்கு உதவும் வகையில், இப்பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவர் தூத்துக்குடியில் தனக்குள்ள 2 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை பள்ளிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்தச் சொத்து மூலம் பள்ளிக்கு மாதம் 58 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளியின் செயலாளர் எம். முரளி கணேசன் கூறியபோது, "தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளியில், முன்னாள் மாணவர்களிடமிருந்து நிதி உதவி பெற்று ஏழை மாணவியருக்கு பள்ளிக் கட்டணம் செலுத்தும் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை மொத்தம் மூன்று லட்சத்து 60 ஆயிரத்து 300 ரூபாய் நிதியுதவி கிடைத்துள்ளது. இதன்மூலம் 91 மாணவியருக்கு கல்விக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு டிசம்பர் முதல் தற்போதுவரை பெறப்பட்ட ஒன்பது லட்சத்து 30 ஆயிரத்து 700 ரூபாய் உதவித் தொகை நடப்பு கல்வியாண்டில் தகுதியான மாணவியருக்கு கட்டணமாகச் செலுத்தப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட 201 மாணவியரின் பெற்றோருக்கு 1000 ரூபாய் வீதம் இரண்டு லட்சத்து ஆயிரம் ரூபாய் உதவித் தொகை பள்ளி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டபோது, செல்போன் வசதி இல்லாத 20 மாணவியருக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவில் செல்போன்கள் வாங்கிக் கொடுக்கப்பட்டன. மேலும், 10, 11, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவியருக்கு செல்போனுக்கான இணையதள பயன்பாட்டுக்கு உதவும் வகையில் மாதம் தோறும் ரீசார்ஜ் செய்ய 50 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பல்வேறு பணிகள் நடைபெற்றுவரும் வேளையில், இதனை ஊக்கப்படுத்தும்விதமாக முன்னாள் மாணவர் ஒருவர் தனது 2 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை ஏழை மாணவியரின் படிப்புக்காக நன்கொடையாக வழங்கியுள்ளார்.