தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று (ஜூலை 3) முதல் இரவு நேர விமான சேவை தொடக்கம்!

தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையத்தில் தரம் உயர்த்தப்பட்டு இன்று (ஜூலை 3) முதல் இரவு நேரங்களிலும் விமானம் தரையிறங்கும் வசதி தொடங்கியுள்ளதாக விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

By

Published : Jul 3, 2020, 9:29 PM IST

tut
tut

தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு விமானங்கள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன. சென்னைக்கு அடுத்தப்படியாக வளர்ந்து வரும் தொழில் நகரமாக தூத்துக்குடி திகழ்கிறது. தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கத்துக்காக சுமார் 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு 380 கோடி ரூபாய் திட்ட மதிப்பிலான விமான நிலைய விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் இரவு நேரத்தில் விமானங்கள் இறங்கும் வசதி இல்லாமல் இருந்தது.

இது தொடர்பாக தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேரத்தில் விமானங்கள் தரையிறங்கும் வசதி ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து இந்திய விமான ஆணையம் அனுமதியளித்துள்ளது. தற்போது, தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று முதல் இரவிலும் பயணிகள் விமானங்கள் இயக்கம் தொடங்கப்பட்டன.

இது குறித்து விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியன் கூறியதாவது, "இந்திய விமான நிலையங்களின் ஆணைய குழுமம் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து இரவு நேரங்களிலும் விமானங்களை இயக்குவதற்கு அனுமதியளித்துள்ளது. இதனால், பகல் நேரத்தில் மட்டும் விமானப் போக்குவரத்து நடைபெற்று வந்த தூத்துக்குடியில் இனி இரவிலும் விமானங்களை இயக்க முடியும். இந்த சாதனைக்கு துணை நின்ற அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

தூத்துக்குடி விமான நிலையம்

தூத்துக்குடி விமான நிலையத்தில் இது ஒரு புதிய மைல்கல் ஆகும். இரவு நேரத்திலும் பயணிகள் விமானத்தை இயக்குவதற்கு இண்டிகோ நிறுவனம் முன்வந்துள்ளது. அதன்படி இன்று‌ சென்னையிலிருந்து 42 பயணிகளுடன் புறப்பட்ட இண்டிகோ விமானம் மாலை 6.23 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்த விமானம் இரவு 7 மணிக்கு 31 பயணிகளுடன்‌ மீண்டும் சென்னை புறப்பட்டுச் சென்றது. இரவு நேர விமான பயணிகள் போக்குவரத்தினால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி தென்காசி உள்ளிட்ட 4 மாவட்ட மக்கள் மிகவும் பயனடைவார்கள்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:நீட், ஜே.இ.இ தேர்வு தேதி அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details