தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"கூட்டணி இல்லாமல் போட்டியிட நாங்கள் தயார்..! திமுக தயாரா?" அதிமுக எம்எல்ஏ கடம்பூர் ராஜு கேள்வி..!

Kadambur Raju: தமிழகத்தில் நடக்கும் அனைத்து பிரச்சினைகள் குறித்து அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லக்கூடிய கட்சி அதிமுக என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் தனித்து போட்டியிட அதிமுக தயார்
தேர்தலில் தனித்து போட்டியிட அதிமுக தயார்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2023, 7:06 PM IST

அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி

தூத்துக்குடி:சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 224வது‌ நினைவு நாளை முன்னிட்டு, கயத்தாரில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு ஸ்தூபி மற்றும் மணிமண்டபத்தில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ, முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, சண்முகநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுக மக்கள் பிரச்னை குறித்து பேசவில்லை, ஆட்சியை குறித்து தான் பேசுகிறார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, "3 நாட்கள் நடைபெற்ற சட்டமன்ற கூட்ட தொடர் நிகழ்வுகளை அவர் எடுத்து பார்த்தால், தமிழகத்தில் நிலவுகின்ற ஆசிரியர் போராட்டம், செவிலியர் போராட்டம் போன்ற பிரச்னைகளை தீர்க்க வேண்டும். தர்மபுரி வெடி விபத்து குறித்து அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று நிவாரணம் அளிக்க வேண்டும். தமிழகத்தில் விரும்பதகாத, வேண்டதகாத சம்பவங்கள் நடந்தால் அதனை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லக்கூடிய கட்சி அதிமுக, சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி அதிமுக தான்.

திமுக உறுப்பினர்கள் மட்டுமின்றி அனைவரும் வியந்து பாராட்டும் படி பேசக்கூடிய ஆற்றல் மிக்க எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். மேலும், சட்டமன்றத்தில் பேசியது முழுவதும் மக்கள் பிரச்னை. ஆனால் இருக்கை பிரச்னை எங்கள் உரிமை பிரச்சனை மு.க.ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருந்த போது, அவரது இருக்கைக்கு அருகில் துணைத்தலைவர் துரை முருகனுக்கு இடம் அளித்தோம். துணைத் தலைவர் ஆர்.பி.உதயக்குமார் தான் என்று கூறிய பிறகும் கூட இருக்கை அளிக்க மறுக்கப்படுகிறது.

நாங்கள் தான் அதிமுக என்று நீதிமன்றம், தேர்தல் ஆணையம், மக்கள் மன்றத்தில் நிரூபித்து விட்டோம். சட்டமன்றத்தில் நாங்கள் உரிமையை நிலை நாட்ட வேண்டிய இடத்தில் இருக்கிறோம். இதைவைத்து திமுக அரசியல் செய்கிறது. இதை மறைப்பதற்கு உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள் இதைப்போன்ற கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். உண்மை என்ன என்பது மக்களுக்கு தெரியும்" என பேசினார்.

பின்னர் அதிமுக தனித்து வந்தாலும், கூட்டணியோடு வந்தாலும் திமுகவை வெல்ல முடியாது என உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து கேட்ட கேள்விக்கு, "2014ஆம் ஆண்டு முன்னாள் முதலமச்சர் ஜெயலலிதா அட்சிக் காலத்தில், தனியாக நின்று நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து, 37 இடங்களில் வெற்றி பெற்றோம்.

ஆனால் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணி அமைத்து தான் 38 இடங்களில் வெற்றி பெற்றது. தமிழகத்தில் அதிமுக தான் நம்பர் 1 கட்சி. வரும் தேர்தலில் அதிமுக தனியாக போட்டியிட தயாராக உள்ளது. திமுக தயாராக உள்ளதா?" என்று கேள்வி எழுப்பினார்.

பின்னர், தமிழகத்தில் பாஜக தான் எதிர்க்கட்சியாக குரல் கொடுக்கிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் அறியாமையில் பேசுவதாக விமர்சித்து பேசிய முன்னாள் அமைச்சர் காடம்பூர் ராஜூ, தமிழகத்தின் எதிர்கட்சி எது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும் என்று பதிலளித்தார்.

இதையும் படிங்க: ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பணமாக விளங்கிய.. வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட தினம்!

ABOUT THE AUTHOR

...view details