தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் தேர்வு விலக்கு அதிமுக தீர்க்கம் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தூத்துக்குடி: நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்பதில் அதிமுக தீர்க்கமாக உள்ளது என்று மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதய குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

By

Published : Sep 12, 2020, 9:33 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஜெ. பேரவை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதற்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுகச் செயலாளரும், அமைச்சருமான கடம்பூர் ராஜூ தலைமை வகித்தார்.

கூட்டத்தில், மாநில ஜெ. பேரவைச் செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு, உறுப்பினர் சேர்க்கைப் படிவங்களை வடக்கு மாவட்ட ஜெ. பேரவைச் செயலாளர் சி.செல்வக்குமாரிடம் வழங்கினார். அப்போது அமைச்சர்கள் முன்னிலையில் திமுக, அமமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பலர் அதிமுகவில் இணைந்தனர்.

பின்னர் வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'விளாத்திகுளத்தை தலைமையிடமாகக்கொண்டு கோட்டம் அமைக்கும் பணி ஆய்வில் உள்ளது. கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்கள் தொடர்பாக டிஎன்பிஎஸ்சியிடம் பட்டியல் வழங்கியுள்ளோம். தற்போது கரோனா காலம் என்பதால் தேர்வுகள் எதுவும் நடைபெறவில்லை. மிக விரைவில் தேர்வுகள் நடைபெற்று அனைத்து இடங்களும் பூர்த்தி செய்யப்படும்.

தேர்வு என்பது வாழ்க்கையில் ஒரு அங்கம் தான். வாழ்க்கையே நீட் தேர்வு தான் என்று மாணவர்கள் அச்சம் கொள்ளக் கூடாது. மதுரை மாணவி உயிரை மாய்த்துக்கொண்டதுபோல் துயரச்சம்பவம் இனியும் தமிழ்நாட்டில் நடக்கக்கூடாது என இறைவனை வேண்டுகிறோம். அதிமுக நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் எனத் தீர்க்கமாக உள்ளது.

சாமானிய மக்கள், ஏழை எளிய மக்கள், ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் இன்னும் வெளியே வரவேண்டியுள்ளது. சமுதாயம், பொருளாதார ரீதியில் நாங்கள் அவர்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. அவர்களுக்கு சம நீதியான வாய்ப்பு கொடுக்க வேண்டியுள்ளது. எனவே, இதுபோன்ற தகுதித்தேர்வுகளை எதிர்கொள்ள, எங்களுக்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, நீட் தேர்வில் இருந்து விலக்குத் தாருங்கள் என நாங்கள் உறுதியுடன் சொல்கிறோம்.

வடகிழக்குப் பருவ மழை காலத்தை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளார். கரோனா தடுப்பு நடவடிக்கைகள், மீட்பு நடவடிக்கைகளோடு, பருவமழைக்காலத்தையும் எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகங்கள் தயாராக உள்ளன' என்றார்.

ABOUT THE AUTHOR

...view details