தூத்துகுடி: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் கிராமசபைக் கூட்டங்கள் மூலமாக பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இன்று முதல் வருகிற 10ஆம் தேதி வரை கிராமசபை கூட்டங்கள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கிராமசபை கூட்டத்தில் திமுக மாநில மகளிர் அணி செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான கனிமொழி கலந்துகொண்டு பரப்புரை செய்ய உள்ளார்.
இதற்காக இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் அதிமுகவைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பிருப்பதால் ஆரம்பம் முதலே அதிமுக அரசு இந்த வழக்கை மூடி மறைக்கும் வகையில் செயல்பட்டது. மேலும், குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கத்தோடும் செயல்பட்டு வந்தது.
ஆனால், தொடர்ந்து திமுக கொடுத்த அழுத்தத்தின் காரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையே பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டவர்களை மேலும் மிரட்டும் விதமாக காவல் துறையினரின் மூலமாக புகார் அளித்தவர்களின் பெயர்களைகூட வெளியிட்டு மிரட்டினர்.
எதிர்க்கட்சியினரின் தொடர் போராட்டம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக முதற்கட்டமாக ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில் சிபிஐ விசாரணைக்கு எடுத்து இரண்டு ஆண்டுகள் கழித்து தற்பொழுதும் அந்த வழக்கில் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.