தூத்துக்குடி: மாநகராட்சி அவசரக் கூட்டம் இன்று மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சரருமான எஸ்.பி. சண்முகநாதன் அறிவித்தலின் படி திமுக அரசின் மக்கள் விரோதச் செயலைக் கண்டித்து எதிர்க்கட்சி கொறடா மந்திரமூர்த்தி மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த மாநகராட்சி கூட்டத்தில் திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபான விநியோகம் சம்பந்தமான திருத்த விதிகளைக் கண்டித்தும், தொழிலாளர் வேலைச் சட்டம் 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக மாற்றுவதற்கான மசோதாவை கண்டித்தும், தூத்துக்குடியில் கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் கொலை சம்பவத்திற்கு சட்டம் ஒழுங்கு சீர்கேடே காரணம் என கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அதிமுக சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை மட்டும் அகற்ற முயன்ற மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக எதிர்க்கட்சி கொறடா மந்திரமூர்த்தி பேச முயன்றார்.