தூத்துக்குடி: பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரசக்கதேவி கோயிலின் உற்சவ திருவிழா இன்றும் (மே 12), நாளையும் நடைபெறுகிறது. இத்திருவிழாவுக்கு திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் ஊமைத்துரை நினைவு ஜோதி கொண்டு வரப்படுகிறது. எனினும், விழாவைப் பாதுகாப்பாக நடத்தும் வகையில், போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர்.
முதன்முதலாக காலையில் கயத்தாறில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவிடத்தில் இருந்து நினைவு ஜோதி புறப்பட்ட நிலையில் போலீசார் அதை தடுத்து நிறுத்தினர். ஜோதியுடன் இருசக்கர வாகனங்கள் வரக்கூடாது என போலீசார் நிபந்தனை விதித்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கோயில் திருவிழா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. மேலும் நினைவு ஜோதிகள் வருவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டதால், கோயில் விழா மீண்டும் தொடங்கியது. மேலும், கறுப்புக்கொடி ஏந்தி நடைபெறும் போராட்டத்தை கோயில் நிர்வாகத்தினர் விலக்கிக் கொண்டனர்.