தூத்துக்குடி: தமிழக கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலமாக ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு கடந்த 15-ந் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்த நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இந்த நிலையில் அண்டை மாநில கேரள விசைப்படகு மீனவர்கள் பெரியதாழை பகுதியில் அத்து மீறி நுழைந்து பைபர் படகில் மீன்பிடித்து கொண்டிருந்த மீன்பிடி வலைகளை சேதப்படுத்தி உள்ளனர்.
இது குறித்து சேதப்படுத்தப்பட்ட அந்த படகில் இருந்த மீனவர் ராஜன் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறுகையில், “கடலில் 15 மைல் தொலைவில் தொழில் பார்க்க போய் கொண்டிருந்தோம். அப்போது கேரள மாநிலத்தில் உள்ள படகுகள் வந்து, மீன் பிடித்து கொண்டிருந்த வலையை அடித்து இழுத்து கொண்டு சென்றனர்.
அந்த நேரத்தில் நாங்கள் பாதுகாப்புக்காக வைக்கப்பட்ட நங்குரத்தை அவர்கள் வலையில் போட்டும், எங்களின் பைபர் படகோடு வெட்டி இழுத்துச் சென்றனர். இதனால் கயிற்றை அறுத்து விட்டு கரைக்கு வந்து சேர்ந்தோம். தூத்துக்குடியில் மீன் வளர்ச்சிக்காக தடை காலம் போடப்பட்டுள்ளது. ஆனால் கேரளாவில் இருந்து 6 நாட்டிக்கல் 5 நாட்டிக்கல் தொலைவு வரை மீன்பிடிக்கின்றனர்.
வலையை அடித்து சேதப்படுத்திய போது காலில் விழுந்து கெஞ்சினோம். கேட்காமல் வயிற்றில் அடித்த மாதிரி 1 லட்சம் ரூபாய் வலையை அடித்து சென்றனர். இனி இது போன்ற செயல் நடக்காத வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்சனை மிக பெரிய போராட்டமாக மாறும் முன்னர் இதனை அரசு கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும் என வேண்டிக் கேட்கிறேன்” என்றார்.
பின்னர் இது குறித்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் விசைப்படகு சங்க செயலாளர் ஜவஹர் கூறுகையில், “தமிழகம் முழுவதும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை மீன்பிடி தடைக்காலம் மத்திய அரசு மற்றும் மாநில அரசு அமல்படுத்தி இருக்கின்றது. இதனால் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த நிலையில் கேரள விசைப்படகுகள் கொச்சின், கொல்லம் மீனவர்கள் தூத்துக்குடி கடற்பகுதியில் உள்ள பெரியதாழையில், ஐந்து மைல் கடல் தொலைவில் மீன் பிடித்து வருகின்றனர்.