தூத்துக்குடி:வங்கக்கடலில் ஏற்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களிலும் கன முதல் அதி கனமழை பெய்தது. குறிப்பாக தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்தில் அதிக கனமழை பெய்து மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாகா மாறியது.
இதனால் மக்கள் தங்களது உடமை வீடுகளை இழந்து தவித்து வந்தனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் மீட்கப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். கனமழை காரணமாகவும், குளம் போன்ற நீர்நிலைகள் உடைந்து வெள்ளம் சூழ்ந்ததன் காரணமாகவும் பல்வேறு போக்குவரத்து முடங்கியது.
குறிப்பாக தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பெய்த மிக கனமழை வெள்ளத்தால், தூத்துக்குடி ரயில் நிலையம் மற்றும் ரயில்வே தண்டவாளங்களையும் மாலை நீர் சூழ்ந்தது. இதன் காரணமாக கடந்த 15ஆம் தேதி முதல் தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் ரயில் நிலையம் மற்றும் ரயில் தண்டவாளங்களில் தேங்கியிருந்த மழை நீர் வடிய துவங்கியதை தொடர்ந்து, தூத்துக்குடி ரயில் நிலையத்திலிருந்து முதற்கட்டமாக நேற்று மாலை மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சென்னையில் இருந்து ஐந்து நாட்களுக்குப் பின்பு முத்துநகர் எக்ஸ்பிரஸ் தூத்துக்குடிக்கு ரயில் நிலையத்திற்கு இன்று காலை வந்தடைந்தது.