தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விளாத்திகுளம் இடைத்தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கும் அதிமுக முன்னாள் செய்தித்தொடர்பாளர்

தூத்துக்குடி: விளாத்திகுளம் இடைத்தேர்தலில் தன்னை வேட்பாளராக அறிவிக்காததால் அதிருப்தி அடைந்த அதிமுக கட்சியின் முன்னாள் செய்தித்தொடர்பாளர் ஜீ.வி.மார்க்கண்டேயன் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார்.

admk

By

Published : Mar 21, 2019, 4:15 PM IST

Updated : Mar 21, 2019, 5:14 PM IST

ஏப்ரல் 18ஆம் தேதி தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் காலியாக உள்ள 18 தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தது. இதைத்தொடர்ந்து அரசியல் கட்சியினர் வேட்பாளர் பட்டியலை அறிவித்து தேர்தல் பணிகளில் தங்களை முழுவீச்சுடன் ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடைபெறும் சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றான விளாத்திகுளத்தில், அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ பி.சின்னப்பன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பு அதே தொகுதியைச் சேர்ந்த அதிமுகவின் முன்னாள் கழக செய்தி தொடர்பாளர் ஜீ.வி. மார்க்கண்டேயனுக்கு பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இதனால் மார்க்கண்டேயன் அதிமுக செய்தித்தொடர்பாளர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனிடையே, மார்க்கண்டேயன் தனது ஆதரவாளர்களுடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். அதில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொண்டர்களை தவறாக வழி நடத்தி விட்டனர் என்றும், அமைச்சர் கடம்பூர் ராஜு கனிமொழியிடம் பணம் வாங்கிக் கொண்டு செயல்படுவதாகவும் கடுமையாக குற்றம் சாட்டினார். இது அதிமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில் ஜீ.வி. மார்கண்டேயன் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு, வெற்றி பெறுவதற்கான வழிகள் குறித்து விளாத்திகுளத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது. இதை உறுதி செய்யும் வகையில் ஜீ.வி. மார்க்கண்டேயன் இன்று பரபரப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார். அதில், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக நின்று களம் காணப்போவதாக அறிவித்தார்.

அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பி.சின்னப்பனும், சுயேட்சையாக களம் இறங்கவுள்ள மார்க்கண்டேயனும் சொந்த தொகுதியில் எதிரெதிர் துருவங்களாக தேர்தலில் களம் காண இருப்பதால் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

Last Updated : Mar 21, 2019, 5:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details