சுதந்திரப் போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரின் 148ஆவது பிறந்தநாள் விழா தூத்துக்குடி மாவட்டத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. வ.உ.சி. பிறந்த ஊரான ஒட்டப்பிடாரத்தில் உள்ள அவருடைய பிறந்த இல்லத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார்.
இந்த விழாவில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு 67 லட்சத்து 78 ஆயிரம் மதிப்புள்ள மக்கள் நலத் திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது போல ஒட்டப்பிடாரத்தில் வ.உ.சி. பெயரில் நீதிமன்றம் கண்டிப்பாக அமைக்கப்படும் என்றும் அடுத்த ஆண்டு வ.உ.சி. பிறந்தநாளுக்குள் நீதிமன்றம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். அமைச்சர்கள் வெளிநாடு பயணம் என்பது திட்டமிட்ட பயணம் என்றும் வெளிநாடுகளில் பால் உற்பத்தி, கல்விமுறை உள்பட பல்வேறு துறைகளிலும் அவர்கள் எவ்விதமான சீர்திருத்தங்களை, நடவடிக்கைகளை கடைப்பிடிக்கிறார்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்காக அமைச்சர்கள் வெளிநாடு சென்றிருப்பதாகவும் கூறினார். அமைச்சர்களின் பயணம் என்பது இன்பச் சுற்றுலா அல்ல என்றும் விளக்கமளித்தார்.
அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர் சந்திப்பு பொறுத்தார் பூமி ஆழ்வார் என்று ஸ்டாலின் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அவர் காலம் முழுவதும் பொறுத்திருக்க வேண்டியதுதான் என்றும் அதைத்தான் மக்களும் விரும்புகின்றனர் எனவும் கேலி செய்தார்.
முதலமைச்சரின் வெளிநாடு பயணத்தால் தமிழ்நாட்டிற்கு நன்மை கிடைக்கும் எனில் திமுக சார்பாக பாராட்டு விழா நடத்தப்படும் என ஸ்டாலின் பேசியது பற்றி பதிலளித்த அவர், ஸ்டாலின் அரசியலுக்காக எதையும் பேசக்கூடாது, அவர் துணை முதலமைச்சராக இருந்தவர் அதனால், பாராட்ட மனமில்லை என்றாலும் அரசின் செயல்பாடுகளை விமர்சிக்காமல் இருந்தால் அவருக்கும் நல்லது, மக்களுக்கும் நல்லது என்றார்.