தூத்துக்குடி மாவட்டம், சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூர் ஆகிய இடங்களில் தொல்லியல் துறையின் மூலம் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் சென்று ஆய்வு செய்தார். அகழாய்வுப் பணியின்போது எடுக்கப்பட்ட பழமையான பொருள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "தொல்லியல் துறையின் மூலம் சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூர் ஆகிய 2 இடங்கள் பழமை வாய்ந்த பகுதிகள் என கண்டறியப்பட்டு ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இங்கு கண்டறியப்பட்டுள்ள பொருள்கள் 2 ஆயிரத்து 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள், பயன்படுத்திய பொருள்கள் மற்றும் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன.
தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ள 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக சிவகளை, ஆதிச்சநல்லூர் பகுதிகளில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், பண்டைய காலங்களில் பயன்படுத்திய பானைகள், புகைப்பிடிப்பதற்காக பயன்படுத்திய குழாய்கள், பழைய கற்கள், செம்பு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறுப் பொருள்கள் தொடர்ந்து கிடைக்கப்பெற்றுள்ளன.