தூத்துக்குடி: தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட சேதங்களைப் பார்வையிட 6 பேர் கொண்ட மத்தியக் குழு, இன்று (டிச 20) தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற அதிகாரிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, அவர்கள் தூத்துக்குடி மாநகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஸ்டேட் பேங்க் காலனி, முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்தி நகர் ஆகிய பகுதிகளில் படகு மூலம் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டனர்.
இதன் பின்னர் நகராட்சி நிர்வாக கூடுதல் ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இந்த ஆய்வு குறித்து அவர் கூறுகையில், “தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய இந்திய ரானுவத்தைச் சேர்ந்த மூத்த அனுபவம் வாய்ந்த கர்னல் தலைமையில், மூத்த அதிகாரிகள் 6 பேர் கொண்ட குழு வருகை தந்துள்ளனர்.
முதல் நாளாக இன்று (டிச.20) தூத்துக்குடியில் மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வின் முடிவில் வீடுகள், விவசாய நிலங்கள், மீனவப் படகுகள், உயிரிழப்பு உள்ளிட்ட பல்வேறு சேதாரங்கள் எல்லாவற்றையும் கணக்கிட்டு, ஒரு அறிக்கையாகத் தயார் செய்து தொகுத்து, அதன் மூலமாக இழப்பீடுகளை வாங்குவதற்கு உண்டான பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இதன் தொடர்ச்சியாக, நாளை (டிச.21) திருநெல்வேலி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடைபெற உள்ளது. மொத்தமாக இன்று (டிச.20) மற்றும் நாளை (டிச.21) ஆகிய இரண்டு நாட்களும் இது நடைபெற உள்ளது. இதன் பிறகு, சேதாரங்கள் குறித்து அறிக்கை தயார் செய்யும் பணி நடைபெற உள்ளது.